அபிவிருத்தி அடை யாதது இலங்கை மட்டுமா?இலங்கை வாழ் மக்களின் ஆரோக்கியமுமே .

ஆரோக்கியமான வாழ்விற்கு  போஷாக்கு நிறைந்த உணவுகள் உட்கொள்வது இன்றியமையாததொன்றாகும்.ஏனெனில் நாளாந்தம் நாம் உட்கொள்ளும் பல்வேறுபட்ட போஷனைக்கூறுகள் தமக்கென தனித்துவமான தொழிட்பாடுகளைக் கொண்டுள்ளன. வளர்ச்சி,இழையங்களின் புத்தாக்கம் , நோய்களிலிருந்து பாதுகாப்பு , உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குதல் போன்ற பல்வேறுபட்ட தொழிட்பாடுகளின் களஞ்சியமே போஷனைக்கூறாகும் .

Malnutrition

உடலுக்கு தேவையான போஷனைக்கூறுகள் முறையான அளவில் உட்கொள்ளப்படாமையினாலேயே போஷணைக்குறைபாடு  ஏற்படுகிறது. போஷணைக்குறைபாடானது  பல்வேறு காரணிகளால் வகைப்படுத்தக்கூடியது .மூலக்கூறுகளின் அடிப்படையில்  போஷணைக்குறைபாடானது  இரு வகைப்படும்.அவையாவன  மாமூலக்கூறுகளினால் ஏற்படும்  போஷணைக்குறைபாடுகளும் நுண்மூலக்கூறுகளினால் ஏற்படும்   போஷணைக்குறைபாடுகளும் ஆகும்.உட்கொள்ளப்படும் அளவின் அடிப்படையில் , போஷணைக்குறைவினாலும் அதிபோஷாக்கினாலும்  போஷணைக்குறைபாடு ஏற்படும் .இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில்  குறைபோஷணைக்கினாலேயே உடல் பெரிதும் பாதிப்படைகிறது. போஷணைக்குறைபாட்டின் காரணமாக  வயதுக்கேற்ற  உயரம், வயதுக்கேற்ற  நிறை , மற்றும்   உயரத்துக்கேற்ற  நிறை  என்பன மக்களிடையே  காணப்படமாட்டாது. குறைபோஷாக்கின் காரணமாக பல்வேறுபட்ட பாதகமான  விளைவுகள் ஏற்படும் . சுறுசுறுப்பின்மை, வளர்ச்சி குன்றல், நோய்த்தொற்றுக்கான  அதிக வாய்ப்பு, கற்றலில் பிரச்சினை , குறைவான ஆயுட்காலம்  என்பன அப்பாதகமான  விளைவுகளுக்குள்  உள்ளடக்கப்படும் .

குறைபோஷாக்கினால் மட்டுமன்றி அதிபோஷாக்கினாலும் ஊட்டச்சத்துக்குறைபாடு ஏற்படும். உடற்பருமன் அதிகரித்தல் அதிபோஷாக்கினால் ஏற்படும் பாரிய விளைவாகும். இதனால் பல்வேறுபட்ட நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதுமட்டுமன்றி உளவியல் ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும் பல்வேறுபட்ட தாக்கங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இலங்கை வாழ் மக்களிடையே பொதுவாக காணப்படும் நுண்போஷணைக்குறைபாடுகளாவன : இரும்பு , அயடீன் , விற்றமின் “ஏ” , கல்சியம் மற்றும் நாகம். இரும்புச்சத்துக் குறைபாட்டுக்குக் காரணங்களாவன : இரும்புச்சத்து அதிகமாக அடங்கியுள்ள உணவுகளை குறைவாக உண்ணல், இரும்புச்சத்தானது இலகுவாக அகத்துறிஞ்சப்படாமை, பொருத்தமற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் அதீத இரத்தப்போக்கு. இரும்புச்சத்து குறைபாட்டினால் குருதிச்சோகை, சோம்பேறித்தன்மை , விரைவான களைப்பு என்பன ஏற்படும்.இரும்புச்சத்து  குறைபாட்டினை இல்லாதொழிப்பதற்கு    சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.அவையாவன: இரும்புச்சத்து அதிகமாக அடங்கியுள்ள உணவுகளை உட்கொள்ளல்( விலங்குணவுகள் -இறைச்சி, முட்டை ..), அடிக்கடி தேநீர் அருந்துவதை தவிர்த்தல் , இரும்புச்சத்தை  அகத்துறிஞ்சும்  தூண்டிகளை  உட்கொள்ளல் ( எலுமிச்சம்பழம் ) மற்றும்  இரும்புச்  சத்து  அடங்கியுள்ள  வில்லைகள் உட்கொள்ளல்.

விற்றமின் “ஏ ” குறைவினால் பெரிதும் பாதிப்படைவது கண்ணாகும் .எனவே, விற்றமின் “ஏ ” அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள  வேண்டும்.கர்ப்பகாலத்தில் அதீத  விற்றமின் “ஏ ”  உள்ள உணவுகளை உட்கொள்ளாதிருப்பது சிறந்தது. ஏனெனில் அதீத விற்றமின் “ஏ ”  கருவின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

அயடீன் குறைவினால் தைரொக்சின் ஓமோனின் உற்பத்தி பாதிப்படையும்  . எனவே, கழலை உருவாதல், மூளை விருத்தி பாதிப்படை தல், கற்றலில் பாதிப்பு  போன்ற விளைவுகள் ஏற்படும் .எனவே, அயடீன் சேர்க்கப்பட்ட உப்பினை   சமைத்து முடித்த  பின்  (சூடு ஆறிய பின் ) உணவில் சேர்த்தல் சிறந்தது.கடல்வாழ்  உயிரினங்களை  உட்கொள்வதன்  மூலமும்  அயடீன் தேவையைப்  பூர்த்தி செய்து  கொள்ள முடியும். அதுமட்டுமன்றி  கடல் வாழ் உயிரினங்களின் மூலம் கல்சியம், நாகம் போன்றவற்றின்  குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும்  வயதுக்கேற்ற உணவுகளை  உண்ணல் அவசியம். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சகலவிதமான போஷாக்கும் அடங்கியிருத்தல் முக்கியமானதொன்றாகும். மேலும் கர்ப்பிணிகள் தமது போஷாக்கில் அதீத அக்கறையுடன் இருத்தல் வேண்டும்.எனவே, அனைத்து போஷனைக்கூறுகளையும் சரியான அளவில் உட்கொள்ள வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.ஏனெனில் ஆரோக்கியமான மக்களே ஒரு நாட்டின் ஊன்றுகோலாகும்.

Rate this article 1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 5.00 out of 5)

Loading...

Translate »