இயற்கை சுவையூட்டிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்

பழமை என்பது எப்போதும் இனிமையான விடயம் நவீன மயமாக்கலின் மூலம் நடை, உடை, பாவனை, நாகரீகம், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் மாறிவருகின்றது. இயற்கையுடன் இணைந்த செயற்பாடுகள் தரும் நன்மைகள் எவற்றிலும் பெறமுடியாது. அந்த வகையில் மனிதன் உயிர் வாழ உணவு அத்தியாவசியமானது. இயற்கை உணவுகள் தரும் பயன்களும் மருத்துவகுணங்களும் பக்கவிளைவின்றி எந்த செயற்கை உணவுகளிலும் பெறமுடிவதில்லை.

நோய் வரும் முன் காப்பது புத்திசாலித்தனம். வந்த பின் மருத்துவம் தேடுவது வழமையாகிவிட்டது. இன்றைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமான வாழ்விற்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. அவை சரியான உணவு தேர்வு, உடற்பயிற்சி. நமது மூதாதையர்களை உற்று நோக்கினால் அவர்களது உணவுப் பழக்கங்கள் முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் முழுமையாக இயற்கை உணவில் தங்கியிருந்ததுடன் சாதாரணமாக தங்கள் வேலைகளை தாங்களே செய்து முடிக்கும் திறன் கொண்டவர்களாக காணப்பட்டார்கள். எந்த இயந்திரத்திலும் இவர்கள் தங்கியிருக்கவில்லை. மிக முக்கியமாக உணவையே மருந்தாக உபயோகிப்பார்கள். அந்த வகையில் இயற்கை சுவையூட்டிகளின் பங்கும் அளப்பரியது.

முன்னைய காலத்தில் நற்சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகு, கடுகு, வெந்தயம், மல்லி, கறிவேப்பிலை என இன்னும் பல இயற்கை சுவையூட்டிகளை நாளாந்த உணவில் சேர்த்துக்கொள்வார்கள். இவை முற்றிலும் பயன்மிக்கவை. பாரம்பரியமாக இவற்றின் மருத்துவம் உணர்ந்து பாவனை செய்தார்கள். ஒப்பீட்டளவில் அவர்களின் ஆயுளும் நீண்ட காலமாகவே இருக்கிறது.

ஆனால் இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்டது. அதிகளவு நவீன மருத்துவங்களை மட்டுமே நம்புகிறது. உணவில் கவனம் எடுப்பது குறைவாகவே உள்ளது. அது மட்டுமல்ல இச்சுவையூட்டிகளின் பாவனையும் குறைந்து கொண்டேவருகிறது.

இப்போது மேலே குறிப்பிட்ட சுவையூட்டிகளின் மருத்துவ குணங்களை பார்ப்போம்.

சின்னச்சீரகம்

19-Amazing-Benefits-Of-Cumin-Jeera-For-Skin-Hair-And-Health

சின்னச்சீரகம் என்பது ஒரு மருத்துவ மூலிகை ஆகும். சீர் + அகம் = சீரகம் இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப் பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சி தன்மையும் கொண்டது. இது மணம், சுவை, செரிமான தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் இதற்கு  உண்டு.

இரத்தத்தை சுத்தமாக்குகிறது. தோல் நோய்களை கட்டுப்படுத்துகிறது.சீரகத்தில் 2.5% எளிதில் ஆவியாகும் எண்ணெய்ப்பொருள் காணப்படுகிறது. இதிலிருந்து அல்டிகைட்டுக்கள் (aldehyde), பைனினி(Piene), அல்பாடெர்பின்(alpha-Terpene), லிமோனின்(Limonene) போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. சீரகத்திற்கு இரத்த அழுத்தத்தை குணமாக்கும் திறனும் காணப்படுகிறது. சீரகம் கொழுப்பை எரிக்கும் பொருளாக உள்ளது. அத்துடன் எடையை குறைக்கவும், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.

பெருஞ்சீரகம்

fennel_seed

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதற்கு சோம்பு என்று மறுபெயர் உண்டு. இது பூண்டு வகையை சேர்ந்தது. சோம்பின் மருத்துவ குணங்கள் செரிமானத்தை தூண்டும். பசியைத் தூண்டும் தன்மையும் இதற்கு உண்டு.

பெருஞ்சீரகம் குடற்புண்ணை ஆற்றும் ஆற்றல் கொண்டது. அத்துடன் வயிற்றுவலி, அஜீரணக்கோளாறுகள், வயிற்றுப்பொருமல் ஆகிய பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கிறது. ஈரல் நோயை குணப்படுத்த சோம்பு ஒரு மருந்தாக பயன்படுகிறது. இருமல், இரைப்பு, நாள்ப்பட்ட வரண்ட இருமல், இவைகளை கூட எளிதில் மாற்றும் திறன் கொண்டது.

வெள்ளைப்பூண்டு

Garlic and parsley isolated on white

பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல் உணவுகள் முழுமை அடையாது. மிகவும் திடமாகவும், கசப்பு தன்மையுடனும் இருந்தாலும் கூட இது சேர்க்கப்படும். உணவின் சுவை, மணம் கூடும். நினைவிற்கு எட்டாத காலம் முதல் பலவித நோய்கள் மற்றும் மருத்துவ சிக்கல்களை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் மூலிகை மருந்தாக பயன்பட்டு வந்துள்ளது.

பக்ரீரியா எதிர்ப்பி மற்றும் வைரஸ், பங்கசு, மற்றும் புழுத்தொற்றுக்களை கட்டுப்படுத்த இது உதவும். சரும தொற்றுக்களை கட்டுப்படுத்த பூண்டில் உள்ள அயன் என்ற இரசாயனம் பெரிதும் உதவுகிறது. பூண்டில் உள்ள அயன் உடலில் இரத்தக்கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இரத்தக்கொதிப்பை குறைக்கும். அஞ்சியோடென்சின்-ll (Angiotensin-ll) என்ற புரதம் இரத்தக்குழாய்களை சுருங்கச் செய்வதால் இரத்தக்கொதிப்பை அதிகரிக்கச் செய்யும். பூண்டில் உள்ள அலிசின் (Allicin) அஞ்சியோடென்சின்-ll வின் நடவடிக்கைகளை தடுக்கும். விசேடமாக பூண்டில் அழற்சி எதிர்ப்பு குணங்களும் அடங்கியுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும். பூண்டால் இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக பேணப்படும்.

இஞ்சி

ginger

இஞ்சி உணவின் ருசி கருதி உணவுடன் சேர்த்துக்கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்கு பொருளாகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் கூட. இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என பொருள்படும். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் கொள்கிறது. இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும்.

வாயில் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க செய்து பசியை தூண்டும் மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும். இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், அஜீரணம், வாய்துர்நாற்றம் என்பன நீங்கும். அதேவேளை சுறுசுறுப்பும் ஏற்படும். இத்தாவரத்தில் ஒலயோரெசின்கள் (Oleoresin), ஜின்ஜரோல் (Gingerol), சிங்கிபெரின் (Zingiberene) ஆகியவை அடங்கியுள்ளது. மார்புவலி, களைப்பு, மலச்சிக்கல் என்பவற்றை நீக்கக்கூடியது. இஞ்சியில் உள்ள சில மருத்துவ நன்மைகள் இரத்தக்குழாயில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பை தடுப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.

மிளகு

pepper-health-benefits

‘பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’ என்று ஒரு பழமொழி உள்ளது. இதற்கு காரணம் நச்சுத்தன்மையை நீக்கும் திறன் இதற்கு உள்ளது. மிளகில் உள்ள வேதிப்பொருட்கள் மிகவும் நன்மை பயக்கக்கூடியது. மிளகிற்கு வீக்கத்தை குறைக்கும் பண்பும், வாதத்தை அடக்கும்  பண்பும் உள்ளது. அத்தோடு பசியை தூண்டும் ஆற்றல் கொண்டது.

மிளகில் K, Ca, Zn, Mn, Fe, மற்றும் Mg ஆகிய கனியுப்புக்களும் விட்டமின்கள் C, A கரோட்டின்கள் மற்றும் பிற சத்துக்களும் காணப்படுகின்றன. இவை சுயாதீன மூலிகங்களை அகற்றி பாதுகாக்கிறது. மிளகு வயிற்றில் உள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தரும். இது காரமும், மணமும் உடையது. உணவை செரிக்க வைப்பதுடன் உணவிலுள்ள நச்சு தன்மையை போக்க வல்லது. மிளகு ஜீரண சக்தியை அதிகரிக்கும். நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டிவிடுவதுடன் வயிற்றில் உள்ள ஐதரோக்குளோரக்கமிலம் சுரப்பதை தூண்டும். சருமப்புற்றுநோய், வயிற்றுப்புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய்களையும் மிளகு தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெந்தயம்

fenugreek

வெந்தயத்தில் அதிகளவு மருத்துவ குணங்கள் செறிந்து காணப்படுகிறது. இரத்தத்தில் படிந்திருக்கும் கொழுப்பை அகற்றும் அல்லது குறைக்கும் ஆற்றல் கொண்டது. வெந்தயத்தில் அதிகளவு Steroidal Sapogenins காணப்படுகிறது. இவ் வேதிப்பொருளானது உடலின் கொழுப்பையும், கிளிசரோலையும் குறைக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் வெந்தயத்தில் அதிகளவு கரையக்கூடிய நார்ப்பொருட்கள் காணப்படுகின்றன.

இது இரத்தத்தில் சீனி அதிகரிக்கும் வீதத்தை குறைக்கிறது. வெந்தயத்தில் காணப்படும் Disogenin என்ற வேதிப்பொருள் பால்சுரக்கும் அளவை அதிகரிக்கும். இது கருப்பை சுருக்கத்தை அதிகரிப்பதன் மூலம் குழந்தை பேற்றை இலகுவாக்கும். வெந்தயத்தில் ஐசோபிளேவனோன்ஸ், இரும்பு, மற்றும் விற்றமின் c காணப்படுகின்றன. வெந்தயத்திற்கு வீக்கத்தை (Anti-inflammatary) குறைக்கும் திறன் உண்டு. சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதுடன் எரிவு, எக்சிமா போன்றவற்றிற்கும் தீர்வாகும்.

கடுகு

mustard-spilled-600px

கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது என்பார்கள். முன்னோர்கள் மணத்துக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தும் கடுகை பயன்படுத்தி பல்வேறு கோளாறுகளை குணப்படுத்த முடியும். இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிறது. அத்துடன் உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. மேலும் கடுகானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன் காய்ச்சலையும், வலியையும் தணிக்கின்றது.

கடுகில் காணப்படும் ஆன்டிஒட்சைட்டுகள், ஒலிக் அசிட், நார்ப்பொருட்கள் உடலில் காணப்படும் கெட்ட கொழுப்புகளை (LDL) குறைக்க உதவுகிறது. நல்ல கொழுப்புகளை (HDL) அதிகரிக்கிறது. அத்துடன் நார்ப்பொருட்கள் மலச்சிக்கல் ஏற்படுவதை குறைக்கிறது. கடுகில் பொட்டாசியம் காணப்படுகிறது. அது இதயத்துடிப்பு வீதத்தையும், இதய அழுத்ததையும் குறைக்கிறது. கடுகில் அதிகளவு இரும்பு, நாகம், கல்சியம் போன்ற கனியுப்புக்கள் காணப்படுகின்றன. இவை பிற பொருள் எதிரிகளின் உருவாக்கத்தை அதிகரித்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும் எலும்புகளின் உறுதித்தன்மையையும் அதிகரிக்கிறது.

கறிவேப்பிலை

Curry-Leaves-For-Hair-Growth

கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை என அழைக்கப்படும். இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள சுவையூட்டியாகும். பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் சுவையூட்டும் பொருளாக பிரசித்தம் பெற்ற ஒன்றாகும். சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல், மற்றும் தொண்டைக்கம்மல் ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவும், நரையற்ற உரோமம் ஆகியவற்றை பெறமுடியும். இதற்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தியும் உண்டு. கறிவேப்பிலை அதிகளவு அன்டிஒட்சைட்டுகளை கொண்டுள்ளதால் வயிற்றுப்போக்கு, அதிகளவு அமிலம் சுரத்தல், குடற்புண், கொழுப்பு படிவு ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது. கறிவேப்பிலையில் அதிகளவு நார்ப்பொருட்கள், கனியுப்புக்கள், விற்றமின்கள், அன்டிஒட்சைட்டுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி, பக்டீரியா, பங்கசுக்களால் ஏற்படும் தொற்றுக்களை நீக்கும்.

மல்லி

sb10069325z-001-56a497ba5f9b58b7d0d7b917

மல்லி மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. மல்லிப்பொடிக்கு தனியாக ஒரு மவுசு இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஐரோப்பாவில் பல இடங்களில் இதனை ‘அன்டிடயபற்றிக்’ செடி என்று கூட அழைக்கின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சல்மொனெல்லா என்ற நுண்ணுயிரை அடக்கும் ஆற்றல் மிக்கது.

அதிலுள்ள ஆவியாகும் எண்ணெயில் லினசால், பார்நியோஸ், கார்வோன், எபியெனின், கியூமரின்ஸ் என பல தாவர இரசாயனங்கள் உள்ளன. மல்லியில் கொலஸ்ரோலை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொற்றை ஏற்படுத்தும் நோயக்கிருமிகளை அகற்றி உடலை பாதுகாக்கும்.

இவ்வாறே இயற்கை சுவையூட்டகளின் பயன்கள் ஏராளம். நாளாந்த உணவில் இவற்றை சரியான அளவில் சேர்ப்பதன் மூலம் சுவையுடன் கூடிய மருத்துவத்தையும் பெறமுடியும். இந்த சுவையூட்டிகளின் ம(ரு)கத்துவத்தை உணர்ந்த மூதாதையர்கள் இவற்றை பயன்படு்த்தி பயன் பெற்றார்கள். ஆகவே நாமும் இயற்கையுடன் இணைந்து இச்சுவையூட்டிகளை பயன்படுத்தி பயன் பெறுவோம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Translate »