சுக வாழ்வு தரும் உடற்பயிற்சி

மனித இனம் பூமியில் வாழும் இலட்சக்கணக்கான வருடங்களாக வேட்டையாடுதல், பயிர்ச்செய்கை செய்தல், எதிரிகளிடமிருந்து பாதுகாத்தல் போன்ற எல்லாத் தேவைகட்கும் உடலுலைப்பிலும் தசை இயக்கத்திலும் தங்கியிருந்துள்ளது. மனித உடல் அத்தகைய வாழ்க்கை முறைக்கு இசைவாக்கம் பெற்றதால் உடற்திணிவின் 40% தசைகளாகவும், 10% எலும்புகளாகவும் அமைந்துள்ளது.

கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்பபுரட்சியும் அதன் விளைவாகிய கருவிகளும் மனிதன் எவ்வித தசை இயக்கமுமின்றி தனதுதேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்தின. இது நாகரிகம் என்பதற்கு சோம்பலை வளர்த்தல் எனும் அர்த்தத்தை ஏற்படுத்தியதோடு, உடல் உழைப்பைக் கேவலமாக எண்ணும் மனப்பான்மையையும் வளர்த்து விட்டது.

இத்தகைய மாற்றத்தால் ஆட்கொள்ளப்பட்ட மேற்குலகு, இன்று மக்களிடையே காணப்படும் பெரும்பாலான நோய்ககளில் பெரும்பாலானவை உடலமைப்பிற்கு ஒவ்வாத சொகுசான வாழ்க்கை முறையினாலேயே ஏற்படுகின்றன எனக் கண்டறிந்துள்ளது. இதன் விளைவாக அங்கு மக்களின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக உடற்பயிற்சியும் இடம் பிடித்து விட்டது.

எல்லாத்தசை இயக்கங்களுமே உடற்பயிற்சி என வரையறுக்கப்படுகின்றது. நாம் அன்றாடம் மேற்கொள்ளும் நடத்தல், சைக்கிள் ஓடுதல், விறகு வெட்டுதல், துலா மிதித்தல் எல்லாம் தசை இயக்கங்களின் விளைவுகளாதலால் அவையும் உடற்பயிற்சிகளாகின்றன.

உடற்பயிற்சியினால் ஆபத்து வேளைகளில் ஏற்ற உடலியக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பயிற்சியை மூளை பெற்றுக்கொள்கின்றது. தசைகள், எலும்புகள். மூட்டுக்கள் விருத்தியடைந்து பலமடைகின்றன. போசணைப் பொருட்களைத் திறம்பட உபயோகிக்கும் தன்மைஇழையங்களில் ஏற்படுகின்றது. சுவாச, குருதிச் சுற்றோட்டத் தொகுதிகள் சீரடைகின்றன. இருதயம் விருத்தியடைவதுடன் ஆரோக்கியம் பெறுகின்றது. வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படப்போகும் உயர்குருதியமுக்கம், இருதய நோய்கள், சலரோகம், மூட்டு வியாதிகள் போன்ற நோய்கள் ஏற்படும் தன்மை பெருமளவு குறைகிறது

உடற்பயிற்சி உளநலத்துக்கும் உதவுவது அறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சியாளர்கள் பொதுவாக பின்வரும் குண இயல்புகளை வெளிக்காட்டுகின்றனர். தமது உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர்ந்து அமைதியடைகின்றனர். பதற்றம், விரக்தி, கவலை என்பவற்றால் அதிகம் பாதிப்படைதில்லை. வாழ்வில் பறறும் நம்பிக்கையும் உடையவராகின்றனர். தன்னம்பிக்கையும் ஆக்கபூர்வமான சிந்தனையும் உடையவராக விளங்குகின்றனர். மேலும், உடற்பயிற்சி பிரச்சினைகளை தீர்த்து ஆற்றலை அதிகரிப்பதுடன் புத்திசாதுரியம், கற்கும் ஆற்றலை  அதிகரிப்பதாகவும் பலர் நம்புகின்றனர்.

மேலும், பலர் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபடும்போதும், சிரமதானன அடிப்படையில் உடலுழைப்பில் ஈடுபடும்போதும் கிடைக்கும்  சமூக முன்னேற்றம், புரிந்துணர்வு என்பவற்றின் நன்மைகளை அளவிடமுடியாது.

மேற்கூறிய நன்மைகளை பெறுவதற்கு எவ்வயதில், எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். எல்லா வயதினரும் ஆண், பெண் பேதமின்றி உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே கடுமையான பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது. படிப்படியாக தமக்குள்ள நேரம், ஆற்றல் என்பவற்றிற்கேற்ப உடற்பயிற்சியின் அளவை நிர்ணயிக்க வேண்டும்.

உடற்பயிற்சியின்போது இலேசாக மூச்சுவாங்கும் நிலை ஏற்பட வேண்டும். சிரமமாக இருந்தால் அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடற்பயிற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு 90 வரை அதாவது ஓய்விலிருந்ததை விட 20% அதிகரிக்க வேண்டும். தினமும் அல்லது ஒன்றுவிட்ட ஒரு நாளில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது விரும்பத்தக்கது. தினசரியாயின் 20-30 நிமிடங்கள் போதுமானது. ஒன்றுவிட்ட ஒரு நாளாயின் இந்நேரத்தை சற்று அதிகரிக்கலாம்.

வியர்வை வெளிப்படுவது சூழல் வெப்பநிலையிலும் வளியின் ஈரப்பதனிலும் தங்கியிருப்பதால் உடற்பயிற்சியின் அளவை தீர்மானிக்கும் சரியான காட்டியாக இதனை கொள்ள முடியாது. இத்தகைய பயிற்சிகளை உடற்பயிற்சி கூடத்திலோ, விளையாட்டு மைதானத்திலோதான் செய்ய வேண்டுமென்றில்லை. சைக்கிள் ஓட்டுவதும், நடப்பதும், விறகு வெட்டுவதும், நீரிறைப்பதும் கூட உடற்பயிற்சியாக அமையலாம். அதற்கு இவை சற்று விறுவிறுப்பாக முன் கூறப்பட்ட தாக்கங்களை உடலில் ஏற்படுத்த கூடியவாறு செய்யப்படல் வேண்டும்.

சுகவாழ்வு என்பது உங்களிடமுள்ளது; உங்கள் வைத்தியரிடமில்லை. அதற்குத் தேவையான நடவடிக்கைகளில் இறங்குவது உங்கள் பொறுப்பு

சில ஆராய்ச்சியாளர்கள் அவதானித்தபோது கடும் உடற்பயிற்சியாளர் ‘அதிக தசை’ அமைப்பையும், உடற்பயிற்சி-உடலுழைப்பு சற்றும் இல்லாதவர் ‘கொழுத்த’ உடலமைப்பையும், இடைநிலை அளவு உடற்பயிற்சி செய்பவர் மிகவும் விரும்பத்தக்க ‘ஆரோக்கியமான’ உடலமைப்பையும் கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர். இதிலிருந்து அளவான உடற்பயிற்சி உடல்நலத்திற்கு அவசியமானது என்பது தெளிவாகின்றது.

உடற்பயிற்சியில் ஈடுபடும்போது அதிக சக்தி தேவைப்படுவது வெளிப்படை. உடற்பயிற்சியின் அளவுக்கு ஏற்ப உணவில் உள்ளெடுக்கப்படும் சக்தியின் அளவும் அதிகரிக்கப்படல் வேண்டும். ஆனால், உடற்பருமன் அதிகரிப்பதால் அதை குறைப்பதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்கு முன் காபோவைதரேற்று உணவு உண்டால் அது ஈரலிலும் தசைகளிலும் கிளைக்கோஜனாக சேமிக்கப்பட்டு உடற்பயிற்சியின் போது உதவும். போதிய ஆகாரமின்றி உடற்பயிற்சியில், உடலுழைப்பில் ஈடுபட்டால் தேவையான சக்தியை சேமிப்பு கொழுப்பிலிருந்தும் தசைப்புரதத்திலிருந்தும் பெறவேண்டிய நிலை ஏற்படும். இது உடலமைப்பில் மாற்றங்களையும் ஆரோக்கிய குறைவையும் ஏற்படுத்தும். உடற்பயிற்சி முடிவடைந்த பின்னர் உண்பதால் பாதிப்படைந்த இழையங்கள் பயனடைவதில்லை.

உங்கள் உடல் நலம் ?

Monitor your weight

உடற் திணிவுச் சுட்டி = நிறை (கி.கி) / உயரம் (மீற்றர்)2

இப்பெறுமானம் 18.5 – 22.9 (ஆசியர்) ஆக இருப்பது வரவேற்கத்தக்கது. இப் பெறுமானத்தை விட குறைவது உடல் மெலிவை காட்டும், கூடுவது கொழுப்பு அதிகரிப்பை காட்டும். முப்பதிற்கு மேல் இருந்தால் ஆரோக்கிய குறைவைக் காட்டும்.

வயிற்று கொழுப்பின் அளவு = தொப்புள்மட்ட சுற்றளவு / இடுப்புச் சுற்றளவு

இந்த விகிதம் 0.85 இற்குக் குறைவாக இருப்பது ஆண்களுக்கும், ௦.75 இற்குக் குறைவாக இருப்பது பெண்களுக்கும் நல்லது. இதனை விட கூடினால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்பதை காட்டும். சில சமயங்களில் உடற்பயிற்சியினால், அளவுக்கு மிஞ்சிய உடலுழைப்பினால் தீங்குகளும் ஏற்பட்டு விடுகின்றன. நோயுற்ற சந்தர்ப்பங்களில் உடலுக்கு பூரண ஓய்வு தேவை. நோய் கடடுப்பாட்டினுள் வந்த பின்னர், வைத்தியரின் அனுமதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

உடல் அனுமதிக்கும் எல்லையை கவனித்து, உடலின் உணர்வுகளை மதித்து, அளவான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நன்மை பாதுகாப்பானதும் பயனுள்ளதுமாகும்.

எமது பிள்ளைகளை இரவு பகலாக ‘படிப்பு மேசையில்’ இருத்தி வைப்பது, அவர்களது உடல், உள, வளர்ச்சியில், ஆளுமை விருத்தியில், எதிர்கால வாழ்வில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, சிறுவர் மட்டுமல்ல, சகலரும் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரைமணி நேரமாவது உடற்பயிற்சிக்கென ஒதுக்கி, அல்லது வீட்டு வேலைகளில் விறுவிறுப்புடன் ஈடுபட்டு, அதன்மூலம் அன்றாட நிகழ்ச்சிகளால் இழந்த தமது மனோவலிமையை மீளப்பெறுவதுடன் சுக வாழ்வையும் பெறவேண்டும்.

Rate this article [Ratings]

Translate »