நீரிழிவு நோயை தடுக்க, கட்டுப்படுத்த, குணமாக்க உணவுக் குறிப்புகள்

நீரிழிவு நோயானது சீனிவியாதி அல்லது சர்க்கரை நோய் என அழைக்கப்படுகின்றது. எமது உடலின் குருதி குளுக்கோஸ் அளவு சாதாரண மட்டத்தைவிட அதிகரிக்கும்போது (125mg/dl ஐ விட அதிகரிக்கையில்) இந்நோய் ஏற்படுகிறது. குருதி குளுக்கோஸை உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் எனும் ஓமோன் அத்தியாவசியமாகிறது. ஆகவே, இந் நோய் இருப்பவர்களுக்கு உடல் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாமையால் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை பயன்படுத்த முடியாமையால் அல்லது இவ்விரு காரணங்களாலும் உடல் இன்சுலின் சமநிலை பாதிக்கப்பட்டு குருதி குளுக்கோஸ் மட்டம் அதிகரிக்கிறது. நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாக அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகமாக தாகம் எடுத்தல், அதிக பசி, சோர்வு, கண்பார்வை குறைபாடு என்பன காணப்படுகின்றன.

இலங்கையில் இருபது வயதிற்கு மேற்பட்டவர்களில் 10.3% ஆனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களை விட (8.7%) நகர்ப்புறங்களில் (16.4%) அதிகமான மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களை விட (9.8%) பெண்களுக்கு இந்நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது.

நீரிழிவு நோயானது பிரதானமாக மூன்று வகைப்படுகிறது. முதலாவது வகை நீரிழிவானது பிறப்புரிமை ரீதியாக கடத்தப்படுகிறது. இது குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் இளம்பருவத்தினருக்கு ஏறபடுத்துகிறது. இது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழப்பதால் ஏற்படுகிறது.  இரண்டாவது வகை நீரிழிவானது இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காமையால் அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் சரியாக பயன்படுத்தபடாமையால் ஏற்படுகிறது. 90% ஆன நீரிழிவு நோயாளிகளுக்கு இரண்டாவது வகை நீரிழிவே காணப்படுகிறது. அதிக உடல் பருமன் இதற்கு பிரதான காரணமாக அமைகிறது. மூன்றாவது வகை நீரிழிவானது சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படலாம். குழந்தை பிறந்தவுடன் இது மறைந்துவிடுகிறது. ஆனால் பிற்காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் இரண்டாவது வகை நீரிழிவு ஏற்படலாம். மேலும், கணையத்தில் ஏற்படும் பிரச்சினை, சத்திரசிகிச்சை மற்றும் சில மருந்து வகைகளாலும் நீரிழிவு நோய் ஏற்படலாம்.

நீரிழிவு நோய் சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாதவிடத்து மேலும் பல நோய்களான உயர்குருதிஅழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக கோளாறு, கண்பார்வை குறைபாடு மற்றும் நரம்பு சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்பபுண்டு.

நீரிழிவு நோய்க்கு பிரதான காரணங்களாக பொருத்தற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், போதிய உடற்பயிற்சியின்மை, அதிக உடற்பருமன்,  பொருத்தற்ற வாழ்க்கை முறை, மற்றும் அதிக மன அழுத்தம் என்பன அமைகின்றன. நீரிழிவு நோய் வராமல் தடுக்க உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்தல் அவசியம். ஏனெனில் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு  சாதாரண எடை கொண்டவர்களை விட 20-40 மடங்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அதிக உடல் எடை கொண்டுள்ளோரில் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பானது கல்லீரல் மற்றும் ஏனைய உறுப்புக்களில் தங்குவதால் இன்சுலின் எதிர்ப்பையும், நீரிழிவின் தாக்கத்தையும் அதிகரிக்கிறது.

எ
த

அதிக உடல் எடையை தடுக்க சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் அருந்தினால் பசி குறைந்து விடும். அதனால் அதிக உணவு உட்கொள்வதை தடுக்கலாம். மேலும், உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஒரே தடவையில் அதிகளவு உணவை எடுத்துக்கொள்ளாமல் சிறிய அளவு உணவை ஆறு தடவைகள் எடுத்துக்கொள்வதால் உடல் குளுக்கோஸ் அளவு குறையாமல் தேவையான அளவில் வைத்துக்கொள்ள முடியும்.

மாச்சத்து குறைந்த காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பயறு வகைளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தீட்டிய மாச்சத்துக் கொண்ட உணவுகளான வெள்ளைரொட்டி, வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, பாஸ்தா, மிட்டாய் வகைகள், பழச்சாறு, மற்றும், பொரிக்கப்பட்ட நொருக்கு தீனிகள் என்பவற்றை தவிர்த்து இவற்றிற்கு பதிலாக சிறு தானியங்களான அதிக நார்ச்சத்துள்ள சாமை, திணை, வரகு, குதிரைவாலி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ப
ந

கிளைசிமிக் லோட் (Glycemic Load) மற்றும் கிளைசிமிக் சுட்டி (Glycemic Index)அதிகமாக கொண்ட உணவுகள் விரைவாக குருதி குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதால் பாண், கேக், பேக்கரி உணவு பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு வகைகள் போன்ற அதிக கிளைசிமிக் சுட்டி கொண்ட உணவுப்பொருட்களை குறைத்து மரக்கறி வகைகள், தானியங்கள், பருப்பு, பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் (யோக்கட்), பழவகைகள் போன்ற கிளைசிமிக் சுட்டி குறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

குளிர்பானங்கள் பெரும்பாலும் அதிக அளவு சீனியை கொண்டிருப்பதால் அவற்றை உணவில் சேர்க்கும்போது அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக குளிர்பானங்களில் தற்போது சில சமிக்ஞைகள் காணப்படுகின்றன. சிவப்பு நிற சமிக்ஞை காணப்பட்டால் குளிர்பானம் அதிகளவு சீனியை கொண்டிருக்கும். அவற்றை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளல் அவசியம். செம்மஞ்சள்நிற சமிக்ஞை காணப்பட்டால் ஓரளவு சீனியை கொண்டிருக்கும். அதேவேளை பச்சைநிற சமிக்ஞை காணப்பட்டால் குறைந்தளவு சீனியை கொண்டிருக்கும். ஆகவே,  குளிர்பானங்களை தெரிவுசெய்யும்போது மேற்படி சமிக்ஞைகளை கருத்தில் கொண்டு குறைந்தளவு சீனியை கொண்டிருக்கும் குளிர்பானத்தை தெரிவுசெய்தல் அவசியமாகும்.

நீரிழிவானது மேலும் பல நீண்டகால தொற்றுநோய்களுக்கு இட்டுச்செல்வதனால் அதிக சிவப்பு இறைச்சி வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் மற்றும் விலங்கு கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதை குறைத்துக் கொள்ளல் அவசியமாகும். மேலும் அதிகளவு உப்புள்ள உணவுகளை தவிர்க்கவும். கொழுப்பு மெதுவாக செரிமானமாவதால் எளிதில் குருதியில் குளுக்கோஸை அதிகப்படுத்தாது. இதனால் ஆரோக்கியமான கொழுப்பான செறிவுறா கொழுப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது பாலாடைக்கட்டி, யோக்கட், வித்து (விதை) வகைகள், மீன் மற்றும் தாவர எண்ணெய்களை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். செறிவுற்ற கொழுப்புகளான விலங்கு கொழுப்புகளை குறைவாக எடுத்துக்கொள்ளல் சிறந்தது. மேலும், அதிக கலோரிகள், எளிய வெல்லங்கள் கொண்ட உணவுகளை தவிர்த்தல் அவசியம்.

சில நீரிழிவு நோயாளிகள் குருதி குளுக்கோஸ் அளவு அரிகரித்துவிடும் என்ற பயத்தின் காரணமாக உணவை சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போசணை குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குருதி குளுக்கோஸ் அளவு குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனைய மனிதர்களைப் போலவே நீரிழிவு நோயாளிகளும் சரியான ஊட்டச்சத்து தேவை என்பதால் உணவுகளை முற்றிலும் ஒதுக்காமல் சரியான உணவை (கிளைசிமிக் சுட்டி குறைந்த உணவு) சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக சுவையில்லாத உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. இதனால் நீரிழிவு நோயாளிகள் பழங்களை, இனிப்புகளை முற்றாக தவிர்க்க  வேண்டுமென்றில்லை. விருப்பமான பழங்கள், இனிப்புகளை ஒரு சிறு பரிமாறல்களில் சேர்த்துக்கொள்ளலாம். அதிக கலோரிகள் கொண்ட மாச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் கொண்ட முழுத்தானிய உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளல் சிறந்தது. ஏனெனில் நார்ச்சத்தானது மெதுவாக செரிமானமாவதால் குருதி குளுக்கோஸை சரியான அளவில் வைக்க உதவும்.

பொருத்தமான உணவுக் கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக சிறந்த வாழ்க்கை முறைகளும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த அவசியமாகும். குறிப்பாக சாதாரணமானவர்களைவிட புகைப்பிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு 50% அதிகமாக காணப்படுகிறது. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தல் சிறந்தது. அத்துடன் மது அருந்துவதை குறைத்தல் நல்லது.

மன அழுத்தம் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவை நேரடியாக அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள முடிந்த அளவு யோகாசனம், தியானம் செய்தல்வேண்டும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குருதி குளுக்கோஸ் பரிசோதனை செய்வதன் மூலம் குருதி குளுக்கோஸ் அளவு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

ச
க

மேலும் தசைப்பயிற்சி செய்வதால் இன்சுலின் பயன்பாடும், குளுக்கோஸ் அகத்துறிஞ்சலும் அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் 30 நிமிடங்கள் என்றவாறு வாரம் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வதால் குருதி குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைக்கலாம். நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் ஏற்படுவதை தடுக்கலாம். தினமும் உடற்பயிற்சி செய்தால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 30% ஆல் குறைத்துக்கொள்ளலாம் என ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம், மற்றும் உடல் எடை கட்டுப்பாடு என்பவற்றை சரியாக செய்வதால் எந்த ஒரு நபரும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் குருதி குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

Translate »